செங்குன்றம்,:சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல் ஏரிக்கு, பருவ மழைக்காலத்தில், திருமுல்லைவாயல், ஆவடி சுற்றுவட்டாரங்களில் உள்ள பொத்துார் ஏரி, அயன் ஏரி, நல்லுார் ஏரி, கோவில் பதாகை ஏரிகளில் இருந்து நீர்வரத்து உள்ளது.மேலும், தெலுங்கு கங்கை திட்டம் வாயிலாக, ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 12 டி.எம்.சி., நீர் கிடைப்பது வழக்கம். அதனால், புழல் ஏரியின் வாயிலாக, சென்னை குடிநீர் தேவை சமாளிக்கப்படுகிறது.இந்த நிலையில், புழல் ஏரியின் சுற்று வட்டாரங்களில் உள்ள வீடு, தொழிற்சாலை, ஆக்கிரமிப்பு கட்டடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், ஏரியில் மொத்தமாக கலக்கிறது.அதனால், வெங்கடாச்சலம் நகர், அருணா நகர், அனுக்கிரஹம் நகர், கற்பகாம்பாள் நகர் சுற்றுவட்டாரங்களில், ஆகாயத்தாமரை படர்ந்து, ஏரியின் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. மேலும் பல இடங்களில், வீட்டு மனை ஆக்கிரமிப்பாளர்களால், நீர்வரத்து கால்வாய்கள் மாயமாகிவிட்டன.அதனால், ஏரியின் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்றியும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து சென்னையின் குடிநீர் ஆதாரத்தை காப்பாற்ற வேண்டும் என, புழல் ஏரி, அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பாக, நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.செங்குன்றம் அடுத்த திருமுல்லைவாயல், வெங்கடாச்சலம் நகர், ஆரிக்கம்பேடு சாலை சந்திப்பில், நடந்த இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், மேற்கண்ட பிரச்னைகள் குறித்தும், பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.