கடற்கரை - தாம்பரம் ஏசி மின்சார ரயில் 60 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை
சென்னை, சென்னையில் முதல், 'ஏசி' மின்சார ரயில், கடற்கரை - தாம்பரம் தடத்தில் நேற்று மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்ட, 12 பெட்டிகள் கொண்ட முதல், 'ஏசி' மின்சார ரயில் சமீபத்தில், சென்னை ரயில்வே கோட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரயிலில் அமர்ந்தபடி, 1,116 பேர், நின்றபடி, 3,798 பேர் என மொத்தம், 4,914 பேர் பயணிக்க முடியும்.அதிகபட்சம் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ்., அடிப்படையிலான தகவல் பெறும் வசதி உள்ளது. அனைத்து ரயில் பெட்டிகளிலும், 'சிசிடிவி' கேமராக்கள் இருக்கும். அவசர உதவிக்கு ஒவ்வொரு கதவு அருகிலும், ஓட்டுநருடன் பேசும் வசதி, துருப்பிடிக்காத ஸ்டீல் பெட்டி உட்பட பல சிறப்பம்சங்கள் உள்ளன.இந்த ரயில் சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் உள்ள விரைவு பாதையில் நேற்று, மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் பயணம் செய்து, பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:புதிய, 'ஏசி' மின்சார ரயிலில், மினி வினியோக கருவி, ஏசி வசதி, தானியங்கி கதவுகள், நடைமேடைகளில் நிறுத்தம், பிரேக் சிஸ்டம் ஆகியவை சரியாக இருக்கிறதா என சோதனை செய்தோம். ஆய்வுகள் முழு திருப்தியாக உள்ளது. விரைவில் இந்த ரயில் சேவை துவங்கப்படும். தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.