பாரதி உலா 10ம் ஆண்டு நிறைவு விழா
சென்னை, உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம், விசு கல்வி அறக்கட்டளை மற்றும் 'நம் உரத்த சிந்தனை' தமிழ் மாத இதழ் சார்பில், 'பாரதி உலா 2024', பத்தாம் ஆண்டு நிறைவு விழா, சென்னையில் நேற்று நடந்தது. தி.நகர், ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நடந்த நிறைவு விழாவில், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமிக்கு 'பாரதி போராளி' விருது, பாரதி வரலாற்று ஆய்வாளர் சீனி விசுவநாதனுக்கு, 'பாரதி பணி வேந்தர்' விருது வழங்கப்பட்டது. விருதுகளை, திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் வழங்கினார்.விழாவில், 'தையலை உயர்வு செய்' போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லாரி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விருது வழங்கி, திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், ''இளைஞர்களிடம் போதை கலாசாரம் அதிகரித்து வருகிறது. போதை வஸ்துக்களை இளைஞர்கள் பல வழிகளில் பயன்படுத்தி வருகின்றனர். ''பாரதி உலா வாயிலாக, பாரதியை கொண்டு சென்றதை போல், போதை பொருள் குறித்த விழிப்புணர்வையும், நம்மால் இளைஞர்களிடம் கொண்டு செல்ல இயலும்,'' என்றார். விருது பெற்ற, சீனி விசுவநாதன் பேசுகையில், ''பாரதியின் தம்பி, சி.விஸ்வநாத அய்யரின் வார்த்தைகள் மற்றும் வழிகாட்டுதலே, நான் பாரதி குறித்து எழுத துாண்டுகோலாய் இருந்தது. ''பாரதி பெயரிலான, இந்த விருது, நான் பெற்ற விருதுகளில் தனி சிறப்புமிக்கது,'' என்றார்.