குடியிருப்புகளில் மின் விபத்தை தவிர்க்க கேபிள்கள் மாற்றி அமைக்கும் வாரியம்
சென்னை, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், எட்டு மாடி உடைய 205 பிளாக்குகளில், 25,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஒவ்வொரு பிளாக்கிலும், இரண்டு மற்றும் நான்கு அறைகளில் மின் இணைப்பு பெட்டிகள் மற்றும் மீட்டர்கள் உள்ளன. இங்கு, மின் கேபிள்கள் முறையான திட்டமிடல் இல்லாமல் பதிக்கப்பட்டன. இதனால், பிளாக்குகளை சுற்றி, எங்கு பார்த்தாலும் மின் கேபிள்களாக காணப்பட்டன.இதன் காரணமாக, பிளாக்கை சுற்றி மேம்பாட்டு பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு, குறைந்த கேபிள்களை பயன்படுத்தி, மின் இணைப்பு வழங்க வாரியம் முடிவு செய்தது.இதற்காக, ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு, பிளாக்கின் உட்பகுதி வழியாக மின் கேபிள் எடுத்துச் செல்லும் பணி நடக்கிறது. இதற்காக, 40 லட்சம் ரூபாய் வாரியம் ஒதுக்கியது. பிளாக்கின் மேற்பகுதியில், பிளாஸ்டிக் குழாய் வழியாக மின் கேபிள் அமைக்கப்படுகிறது.இதன் வாயிலாக, அசம்பாவிதங்களை தடுப்பதுடன், பிளாக்குகளை சுற்றி மேம்பாட்டு பணிகள் செய்ய முடியும் என, அதிகாரிகள் கூறினர்.