போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட்
சென்னை,சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:வழக்கறிஞர் வாராகி மீதான மோசடி வழக்குகளை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், வராகி மீது உள்நோக்கத்துடன் பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, டி.ஜி.பி., உடனே, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரர் தரப்பில், பொய் வழக்கை பதிவு செய்த போலீஸ் கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.காவல்துறை தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி கூறியதாவது:ஒவ்வொரு வழக்கு விசாரணையின்போதும், நிவாரணத்துக்கு ஏற்ப சில கருத்துகளை நீதிமன்றங்கள் தெரிவிப்பது வழக்கம். நீதிமன்ற கருத்தை காரணம் காட்டி, குற்றம்சாட்டப்பட்ட நபர், வழக்கை ரத்து செய்ய கோர முடியாது.சென்னை கமிஷனராக அருண் பொறுப்பேற்றபின், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, தலைமறைவாக இருந்த பல ரவுடிகளை கைது செய்துள்ளார். சமூக விரோத தடுப்பு நடவடிக்கையை செய்வதால், காழ்ப்புணர்ச்சியில் இப்படிப்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:வேறொரு வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு, கமிஷனரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார்தாரர் கேட்க எந்தவித முகாந்திரமும் இல்லை.சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்ட வழக்குகளின் விசாரணையை, நீதிமன்ற கருத்துகளின் தாக்கமின்றி, தன்னிச்சையாக விசாரித்து, குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது அல்லது தீர்ப்பின் முடிவின்போதுதான், பொய் வழக்கா, உண்மையான வழக்கா என்று அறிய முடியும்.நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.