ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு வணிக வரித்துறை அதிகாரிகள் கைது
சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் ராஜா சிங், 48. சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் சன்னிலாய்டு, 48; இருவரும் நண்பர்கள்.இவர்கள், வெளிநாடுகளில் இருந்து, தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வரும் நபர்களை குறிவைத்து, அவர்களிடம் மாமூல் வசூலித்து வந்தனர். ஹவாலா பணப்பரிமாற்ற கும்பலிடமும், பணம் பறித்துள்ளனர். இவர்களுக்கு துணையாக வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் செயல்பட்டனர். திருப்பத்துார் மாவட்டத்தில் 'சி.டி., ஸ்கேன்' இயந்திரம் வாங்கி கொண்டு, 20 லட்சம் ரூபாயுடன் வந்த முகமது கவுஸ் என்பவரை, திருவல்லிக்கேணி ஓமந்துாரார் மருத்துவமனை அருகே, கடந்த டிச., 16ம் தேதி, ராஜா சிங் தடுத்து நிறுத்தினார்.முகமது கவுஸ் எடுத்து வந்தது, ஹவாலா பணம் எனக்கூறிய ராஜா சிங் மற்றும் சன்னி லாய்டு, தங்கள் கூட்டாளிகளான வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, 31, ஆய்வாளர் தாமோதரன், 41, ஊழியர் பிரதீப், 42, ஆகியோரை, சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.பின், முகமது கவுசை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்வது போல் காரில் கடத்தி, 20 லட்சம் ரூபாயை பறித்து, அவரை விரட்டி விட்டனர்.இதுகுறித்து வழக்கு பதிந்த திருவல்லிக்கேணி போலீசார், ராஜா சிங், சன்னி லாய்டு, பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய, துணை வணிக வரித்துறை அதிகாரிகளான சுரேஷ், 49, பாபு, 41, ஆகிய இருவரையும், சிறப்பு உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர், நேற்று கைது செய்தனர்.