தி.மு.க., பிரமுகர் ஜெயசீலன் மீது அமைச்சர் உதயநிதியிடம் புகார்
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஆவின் பால் தொழிற்சாலையில், ஒப்பந்த பணியில் கடந்த மாதம் 20ல் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த உமாராணி, இயந்திரத்தில் சிக்கி, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உமாராணியின் கணவர் கார்த்திக்கேயனுக்கு, ஒப்பந்ததாரர் ஜெயசீலன், 11 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக கூறினார். இது தொடர்பாக சமரச புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினர் மத்தியிலும், 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி தரப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, ஜெயசீலன் தரப்பிலிருந்து 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மீதி, 7 லட்சம் ரூபாய்க்கு கடந்த 2ம் தேதியிட்ட காசோலை வழங்கப்பட்டது.அந்த காசோலையில் உமாராணியின் கணவர் கார்த்திகேயன் பெயர் எழுதியதில் பிழை இருந்துள்ளதால், வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை. புது காசோலையை கேட்டதற்கு, 'வழக்கை வாபஸ் பெற்றால் தான் பணம் தருவோம்' என, ஜெயசீலன் தரப்பில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.ஜெயசீலன், தி.மு.க.,ஒன்றிய செயலர் பதவி வகிப்பதால், இது குறித்து அமைச்சர் உதயநிதிக்கும் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., மேலிடம் நடவடிக்கை எடுக்காமல் ஜெயசீலனுக்கு ஆதரவாக இருந்தால், கார்த்திகேயன் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளார்.