உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கராத்தேவில் ஒரே நேரத்தில் 3 உலக சாதனை மாநகராட்சி பள்ளி மாணவியர் அசத்தல்

கராத்தேவில் ஒரே நேரத்தில் 3 உலக சாதனை மாநகராட்சி பள்ளி மாணவியர் அசத்தல்

கீழ்ப்பாக்கம், ஒரே நேரத்தில், 15 லட்சம் 'பன்ச்' குத்துகள் உட்பட மூன்று உலக சாதனைகளை படைத்து, மாநகராட்சி பள்ளி 1,500 மாணவியர் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.சென்னை மாநகராட்சியில், 29 பள்ளிகளில் பயிலும், 1,500 மாணவியருக்கு, பத்து பயிற்சியாளர்கள் வாயிலாக, நான்கு மாதங்களாக கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்காப்பு கலை வரலாற்றில் முதல்முறையாக, கராத்தேவில் பயிற்சி பெறும், 1,500 மாணவியரின், மூன்று உலக சாதனை நிகழ்வு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள நேரு பார்க் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.முதல் சாதனையாக, நான்கு மாத பயிற்சியில், முதல் நிலை வெள்ளை பட்டையில் இருந்து, மூன்றாம் நிலை பச்சை பட்டைக்கு தேர்வாகி சாதனை படைத்தனர்.இரண்டாம் சாதனையாக, ஒரே நேரத்தில், 1,500 மாணவியரும், 1,000 'பன்ச்' என, மொத்தம் 15 லட்சம் குத்துகளை குத்தி, மனவலிமையையும், உடல் வலிமையையும் நிரூபித்து சாதனை படைத்தனர்.தொடர்ந்து, மூன்றாம் சாதனையாக, பெண்களின் கரங்களால் படைக்கவும், தடைகளை உடைக்கவும் முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், அதே 1,500 மாணவியர், ஒரு வினாடியில், ஒரே அடியில், 3,000 ஓடுகளை துாள் துாளாக்கி சாதனை படைத்தனர். இச்சாதனைகளை, 'சோழன் உலக சாதனை புத்தகத்தில், பதிவு செய்து, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.நிகழ்வில், மேயர் பிரியா பேசியதாவது:ஒரு காலத்தில், மாநகராட்சி பள்ளிகள் என்றாலே கல்வியும், கட்டடமும் தரமாக இருக்காது என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது. தற்போது அதை மாற்றி, சென்னை பள்ளி என்றாலே தனித்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. பள்ளி கட்டடமே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையிலும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். மாணவர்களாகிய நீங்கள் படித்தால் மட்டும் போதும்; அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை