உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் புகார்களை அடுக்கிய கவுன்சிலர்கள்

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் புகார்களை அடுக்கிய கவுன்சிலர்கள்

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் காமராஜ், கமிஷனர் பாலச்சந்தர், அதிகாரிகள், அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:ராஜா, தி.மு.க., 44வது வார்டு: டெங்கு தடுப்பு பணியாளர்களை ஈடுபடுத்தும் தனியார் நிறுவனம், சரியாக பணி செய்யவில்லை. கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தனியார் நிறுவன ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும். சிட்லப்பாக்கம், செம்பாக்கம் பகுதிகளில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு விதமான வீட்டு வரி வருகிறது. அந்த வீடுகளை நேரில் அளவீடு செய்து வரி விதிக்க வேண்டும்.சங்கர், அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்: வார்டுகளில் குப்பை வாகனம் முறையாக வருவதில்லை. 5வது மண்டலத்தில் எந்த பணியும் நடக்கவில்லை. இதற்கு போதிய அதிகாரிகள் இல்லாததே காரணம். இதில், கமிஷனர் கவனம் செலுத்த வேண்டும்.விஜயலட்சுமி, மார்க்சிஸ்ட், 28 வது வார்டு: அவசர கூட்டத்தில், வரி விதிப்பில் மாற்றம் தொடர்பாக, தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை, வரி கமிட்டிக்கு தெரியப்படுத்தவும் இல்லை; ஒப்பதலும் பெறவில்லை. மக்கள் மீது மேலும் மேலும் வரியை அதிகரிக்கிறார்கள். இது, மக்கள் விரோத செயல்.கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க., 22வது வார்டு: 22வது வார்டில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை. ஆனால், கட்டணம் செலுத்த வேண்டுமென கூறுகின்றனர். விடுபட்ட பகுதிகளில், இரு மாதங்களில் பாதாள சாக்கடை பணி முடிக்கப்படும் எனக் கூறினர். ஆனால் முடியவில்லை.இந்திரன், 5வது மண்டல தலைவர் தி.மு.க.,: ஒவ்வொரு மண்டலத்திலும், நாய் ஷெட்டர் அமைக்கப்படும் எனக் கூறுகின்றனர். 5வது மண்டலத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை. போதிய அதிகாரிகள் இல்லாததே இதற்கு காரணம். இங்குள்ள துணை கமிஷனர், அலுவலகத்திற்கு வருவதே இல்லை. ஒரு சுடுகாடு வேலையை ஒரு வருடமாக செய்கின்றனர்.தாமோதரன், தி.மு.க., 45வது வார்டு: சேலையூரில், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆனால், அறிவிப்பு பலகை மற்றும் சான்றிதழ்களில், நகராட்சி பள்ளி என்று தான் வருகிறது. தாம்பரம் - வேளச்சேரி சாலையில், 10 ஆண்டுகளுக்கு முன், சாலையின் வடக்கிலிருந்து தெற்கு பகுதி வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாயை உடைத்து விட்டனர். இதுவரை, மீண்டும் இணைப்பு தரவில்லை. ஆனால், குடிநீர் கட்டணம் வசூல் செய்கின்றனர். குடிநீர் இணைப்பு கொடுங்கள் அல்லது கட்டணத்தை ரத்து செய்யுங்கள்.கண்ணன், சுயேச்சை, 23வது வார்டு: பொத்தேரியில், ஆண்டு முழுதும் கலங்கல் செல்கிறது. இது மழைநீர் இல்லை; கழிவு நீர். இதை சரிசெய்து, ஏரியை புனரமைக்க வேண்டும்.பாலசந்தர், கமிஷனர்: மாநகராட்சியில் உள்ள நிதியை கொண்டு, தேவையான பணிகளை செய்து, வரும் மழை காலத்தில் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமான பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு இல்லாதவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பிரச்னை தீர்க்கப்படும்.அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு இடையூறுநேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேச எழுந்த போது, தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்மறைாக பேசி, குறுக்கீடு செய்தனர். அப்போது, கமிஷனர் தலையிட்டு, அனைவருக்கும் பேச வாய்ப்பு தர வேண்டும் என, சமாதானம் செய்தார்.

'மைக் ஆப்' செய்த மேயர்

கூட்ட அரங்கின் பின்புறத்தில், பத்திரிகையாளர்களுக்கு சிறிய அறை ஒதுக்கப்பட்டு, கூட்ட அரங்கில் பேசுவது கேட்பது போல், 'ஸ்பீக்கர்' வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கூட்டத்தில், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பேசியது கேட்ட நிலையில், புகார்களுக்கு பதிலளித்த மேயர், தான் பேசுவது பத்திரிகையாளர்களுக்கு கேட்கக் கூடாது என்பதற்காக, 'மைக்'கை 'ஆப்' செய்துவிட்டு பேசினார். இதனால், பத்திரிகையாளர்கள் அதிருப்தியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !