உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எழில் நகர் மேம்பால பணிகள் விறுவிறு போக்குவரத்து நெரிசலுக்கு ஓராண்டில் தீர்வு

எழில் நகர் மேம்பால பணிகள் விறுவிறு போக்குவரத்து நெரிசலுக்கு ஓராண்டில் தீர்வு

கொருக்குப்பேட்டை:கொருக்குப்பேட்டை, தீயணைப்பு நிலையம் அருகே எழில் நகரில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த ரயில் பாதையின் இடையே, எழில் நகர், எம்.ஜி.ஆர். நகர், நேரு நகர், கார்நேசன் நகர், குமரன் நகர், அஜீஸ் நகர், சந்திரசேகர் நகர், கருமாரியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.இங்கு ரயில் போக்குவரத்திற்காக, தினமும் 20 முறைக்கு மேல், வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. தண்டையார்பேட்டை மற்றும் மணலியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும், இந்த சாலையை பயன்படுத்துவதால், போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக மாறியது.ஒன்று, இரண்டு ஆண்டுகள் அல்ல, கடந்த 40 ஆண்டு காலமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். 'ஆம்புலன்ஸ்' உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கும் இதே கதிதான்.இதற்கு தீர்வாக, ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு கொருக்குப்பேட்டை, எழில் நகர் பகுதியில், ரயில்வே கிராசிங்கில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, ரயில்வே துறை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2023 மார்ச் மாதம், கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் அருகே, அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர், பணிகளை துவக்கி வைத்தனர். தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.இதுகுறித்து ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர் கூறியதாவது:என் தேர்தல் அறிக்கையில், ஆர்.கே.நகர் தொகுதியில் ரயில்வே தண்டவாளத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், எழில் நகர், நேரு நகர் ஆகிய இரு பகுதிகளிலும் ரயில்வே மேம்பாலம் அமைப்பேன் என வாக்குறுதி அளித்தேன். அதன்படி, 105 கோடி ரூபாய் மதிப்பீடில், எழில் நகரில் மேம்பாலப் பணிகள் நடந்து வருகிறது. 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.ஓராண்டில் பணிகள் முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். அதேபோல், வரும் பட்ஜெட்டில், நேரு நகர் ரயில்வே மேம்பாலப் பணிக்கான அறிவிப்பு வர உள்ளது. 64 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைய உள்ளது. முதற்கட்ட பணிகள் ஜூன் மாதத்தில் துவங்கும்.தற்போது ரயில்வே பணிகள் நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 30 லட்ச ரூபாய் செலவில், மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ