| ADDED : ஏப் 23, 2024 01:03 AM
எம்.ஜி.ஆர்., நகர்,எம்.ஜி.ஆர்., நகரில், குறுகிய சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 138வது வார்டு எம்.ஜி.ஆர்., நகரில், கங்கைகொண்ட சோழன் குறுக்கு தெரு உள்ளது. இங்கு, பயன்பாட்டில் இல்லாத கட்டடம் ஒன்று உள்ளது. தற்போது, அந்த கட்டடத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அந்த கட்டடத்தில் இருந்த குப்பை அனைத்தும் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து, குறுகிய தெருவில் குவிக்கப்பட்டுள்ளன.இதனால், அத்தெருவில் உள்ள குடியிருப்புவாசிகள், தங்களின் இருசக்கர வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாமலும், சாலையோரம் நிறுத்த முடியாமலும் சிரமப்படுகின்றனர்.மேலும், பல நாட்களாக தெருவில் குவிக்கப்பட்டுள்ள இந்த குப்பையை அகற்ற, அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றுவதுடன், சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக குப்பை குவித்த நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.