உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி கண்காணிப்பு! வேலை செய்யாமல் ஏமாற்றுவோருக்கு கிடுக்கி

மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி கண்காணிப்பு! வேலை செய்யாமல் ஏமாற்றுவோருக்கு கிடுக்கி

சென்னை மாநகராட்சியிலுள்ள குப்பை லாரிகள், 'பொக்லைன், பாப்காட், மெக்கானிக் ஸ்வீப்பர்' உள்ளிட்ட வாகனங்களை, ஓட்டுனர்கள் முறையாக இயக்குவதில்லை என, கமிஷனர் குமரகுருபரன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி கண்காணிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தினமும் 54 கோடி கிலோ குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் உரம், எரிவாயு தயாரிப்பு, மறுசுழற்சி பயன்பாடு, பிளாஸ்டிக் பிரித்தெடுப்பு போக மீதமுள்ள குப்பை, பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் கிடங்கில் கொட்டப்படும்.குப்பை சேகரிப்பு பணியை, 10 மண்டலங்களில் தனியார் நிறுவனங்களும், ஐந்து மண்டலங்களில் மாநகராட்சியும் மேற்கொள்கிறது. குப்பை சேகரிப்பில் தனியார் வசம் 2,287 வாகனங்களும் உள்ளன. மாநகராட்சி தரப்பில் குப்பை சேகரிப்பிற்கு மட்டுமின்றி, பல்வேறு பணிகளுக்காகவும் 2,886 வாகனங்கள் உள்ளன. லாரிகள், பேட்டரி வாகனங்கள், பொக்லைன், பாப்காட், மாடு, நாய் பிடிக்கும் வாகனங்களை இயக்க, 400க்கும் மேற்பட்ட நிரந்தர ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஒப்பந்த அடிப்படையிலும் ஓட்டுனர்கள் பணியாற்றுகின்றனர். வாகனங்களை பராமரிக்க, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கென, தனித்தனி பணிமனைகள் உள்ளன. இந்நிலையில், அதிகாரிகள் வாகனங்களை தவிர, பெரும்பாலான இதர வாகனங்கள் களத்தில் பணி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில், சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், கள ஆய்வு செய்தபோது, கட்டட கழிவுகள், நீர்வழிப்பாதை அடைப்பு அகற்றும் வாகனங்கள் பணியில் இல்லாதது தெரியவந்தது. ஆனால், ஆவணங்களை ஆய்வு செய்த போது, அவை பணியில் இருப்பதாக பதிவாகி இருந்தது. அதிகாரிகள் மாற்றுப் பணிகளில் வாகனங்கள் இயக்கப்படுவதாக கூறி சமாளித்துள்ளனர்.இதில் அதிருப்தியடைந்த கமிஷனர், 'சென்னையில் வடிகால், கால்வாய், குடிநீர், கழிவுநீர் திட்டம், மின் கேபிள், தொலைத்தொடர்பு கேபிள், எரிவாயு குழாய், மெட்ரோ ரயில் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதனால் மண், கழிவுகள் அதிகரித்து வடிகால், கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. கழிவுகளை உடனுக்குடன் அகற்ற இவ்வளவு வாகனங்கள் இருந்தும், ஏன் பணி நடக்கவில்லை. சிலர் செய்யும் தவறால், மொத்த சென்னையும் பாதிக்கிறது' என, அதிகாரிகளிடம் கூறினார்.இதன் தொடர்ச்சியாக, 'வாகனங்களை முறையாக இயக்கி கண்காணிக்க, அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும்' என உத்தரவிட்டார். தற்போது, இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.இது குறித்து, மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வாகன பழுதை சரி செய்வதில் அலட்சியம், ஓட்டுனர்கள் முறையாக பணிக்கு வராதது, அப்படியே வந்தாலும் நிழல் இடமாக பார்த்து வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு துாங்குவது, டீசல், உதிரிபாகங்கள் திருட்டு உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இதனால், சில ஆண்டுகளுக்கு முன், வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டது. ஓட்டுனர்கள் எதிர்ப்பு, திட்டமிட்டு பழுதாக்கியது போன்ற காரணத்தால், ஜி.பி.எஸ்., கருவிகள் அகற்றப்பட்டன. அதன்பின், 10 மண்டலங்களில் துாய்மை பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில் தனியார் நிறுவன வாகனத்தில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தினர். தற்போது, அவையும் முறையான பராமரிப்பில் இல்லை என புகார் வருகிறது. மாநகராட்சியில் சில ஓட்டுனர்கள், பணியில் இருப்பதாக பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, வீட்டிற்கு சென்று விடுகின்றனர். அவர்கள் இயக்க வேண்டிய பொக்லைன் மற்றும் லாரிகள் முடங்கிக் கிடப்பதால் துார்வாருவது, கழிவுகள், ஆகாயத்தாமரை, மரக்கழிவுகள் அகற்றுவது, மாடு, நாய் பிடிப்பது போன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள வாகனங்களை முறையாக இயக்கும் வகையில், ஒவ்வொரு வாகனத்திலும் ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்டு, ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது, கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், மொபைல் செயலி வழியாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிரந்தர ஓட்டுனர்கள் அடாவடி

மாநகராட்சியின் நிரந்தர ஓட்டுனர்களில் சிலர், தி.மு.க., கவுன்சிலர்கள் பெயரை பயன்படுத்தி, கையெழுத்து போட்டுவிட்டு பணிக்கு வருவதில்லை. கவுன்சிலர்களின் தனிப்பட்ட வேலைகளை செய்து கொடுத்துவிட்டு, வீட்டிற்கு சென்றுவிடுகின்றனர்.அதிக ஊதியம் பெறும் சில ஓட்டுனர்கள், குறைந்த ஊதியத்திற்கு வெளிநபர்களை ஓட்டு னர்களாக பயன்படுத்தி, வேறு தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால், மாநகராட்சி பணிகள் முறையாக நடப்பதில்லை. மேலும், முறையாக பணிக்கு வரும் ஓட்டுனர்கள், அதிக நேரம் பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் படுகின்றனர். ஓட்டுனர்கள் பணியை முறையாக பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குடியிருப்பு நல சங்கத்தினர்.

கவுன்சிலர்களும் புகார்

சென்னையில், 10 மண்டலங்களில் இரண்டு தனியார் நிறுவனங்கள் துாய்மை பணி மேற்கொள்கின்றன. தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பை சேரும் அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், மால்கள் போன்றவற்றிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.ஆனால், உட்புற சாலைகளில் தொட்டிகளில் உள்ள குப்பையை சேகரிப்பதில்லை. இதுகுறித்து, மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்கள் பிரச்னை எழுப்பினர்.

கவுன்சிலர்களும் புகார்

சென்னையில், 10 மண்டலங்களில் இரண்டு தனியார் நிறுவனங்கள் துாய்மை பணி மேற்கொள்கின்றன. தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பை சேரும் அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், மால்கள் போன்றவற்றிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.ஆனால், உட்புற சாலைகளில் தொட்டிகளில் உள்ள குப்பையை சேகரிப்பதில்லை. இதுகுறித்து, மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்கள் பிரச்னை எழுப்பினர். - -நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை