அயனாவரம், அயனாவரம், பி.இ., கோவில் பிரதான சாலையைச் சேர்ந்தவர் பிரபாகரன், 50; அதே சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, கடந்த 28ம் தேதி இரவு வந்த நபர், தன் தாய்க்கு இருமல் மருந்து கேட்டுள்ளார். அப்போது, திடீரென கடைக்குள் நுழைந்த நபர், தன்னை போலீஸ் எனக்கூறி, 'டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து கொடுக்கலமா... போதை மாத்திரையும் விற்பனை செய்கிறாயா...' எனக் கேட்டு மிரட்டியுள்ளார்.பின், கடையில் இருந்த, 7,000 ரூபாயை எடுத்துக் கொண்டு, பைக்கில் அவரை அழைத்து சென்றுள்ளார். கொளத்துாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து, 80,000 ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாக, அவரும், அவரது நண்பரும் கூறியுள்ளனர்.பயந்து போன பிரபாகரன், வில்லிவாக்கத்தில் கடன் கொடுக்கும் தெரிந்த நபரிடம் தொடர்பு கொண்டு, 60,000 ரூபாய் வாங்கி, தன்னை மிரட்டியவரிடம் கொடுத்துள்ளார். அதன் பின், அவரை விடுவித்துள்ளனர். இதையடுத்து, பிரபாகரன் புகாரின்படி விசாரித்த அயனாவரம் போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொளத்துார் முருகன் நகரைச் சேர்ந்த, ராஜமங்கலம் ஊர்க்காவல் படை வீரரான தினகரன், 26, என்பவரையும், அவரது நண்பர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முகமது இம்ரான், 27, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.ஊர்க்காவல் படை வீரர் தினகரனின் வாக்குமூலம்:துாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் இருமல் மருந்தை போதைக்காகவும், இரவில் துாங்குவதற்காகவும், இம்ரான் பயன்படுத்தி வந்தார். நாளடைவில், அதன் போதைக்கு அடிமையானார். பல மாதங்களாக, 40,000 ரூபாய்க்கு மேல் அம்மருந்து வாங்கி உள்ளார்.டாக்டரின் பரிந்துரையின்றி மருந்து தந்தது குறித்து பிரபாகரனிடம் கேட்டேன். அதற்காக நடத்திய பேச்சுக்கு பின், அவரிடம் பணத்தைப் பெற்றேன்.இவ்வாறு அவர் கூறினார்.