சென்னை:சவுகார்பேட்டை மின்ட் தெருவில், உள்ள ஒரு குறிப்பிட்ட நிலத்தில், குடியிருப்புடன் கூடிய வணிக பயன்பாட்டிற்காக உரிமையாளர்கள் ஹரிஷ்குமார், சஞ்சய் குமார், தீபக் குமார் ஆகியோர் கட்டடம் கட்டியுள்ளனர்.ஆனால், திட்ட அனுமதியை மீறி கட்டடம் கட்டியதாகக் கூறி, கடந்த ஜன., 31ல் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.இந்த 'சீல்' அகற்ற சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர்மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:மனுதாரர்களுக்கு கட்டடதிட்ட அனுமதி, 2013ல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விதிமீறி கட்டடங்கள் கட்டியதால், 2016ல் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.பின், விதிமீறலை வரன்முறைப்படுத்த அனுமதி கோரி, நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதி கோரியுள்ளனர்.விதிமீறல் பகுதியை மட்டும் சரிசெய்ய வசதியாக, சி.எம்.டி.ஏ., கட்டட சீல் அகற்றும்படி, நகர் ஊரமைப்பு துறை உத்தரவிட்டது.கடந்த 2022ல் மனுதாரர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விதிமீறலை சரிசெய்ய ஒரு வாரத்துக்கு சீல் அகற்றவும் உத்தரவிட்டது. அந்த உத்தரவில் கூடுதல் அவகாசம் ஏதும் வழங்கப்படவில்லை. இருப்பினும், விதிமீறல் சரிசெய்யப்படவில்லை.இதையடுத்து, கடந்த ஜன., 31ல் அதிகாரிகள் மீண்டும் 'சீல்' வைத்தனர். தற்போது, அந்த சீல் அகற்ற, மீண்டும் மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். விதிமீறல் பகுதி இடித்து அகற்றப்பட்டது என, விசாரணையின்போது மனுதாரர்கள் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுபடி, சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள், விதிமீறல் பகுதி சரி செய்யப்படவில்லை என்பதை புகைப்பட ஆதாரத்துடன் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.விதிமீறல் சரிசெய்யாமல், சீல் அகற்றக்கோரி தொடர் மனுக்களை தாக்கல் செய்த மனுதாரர்கள் கண்ணாமூச்சி விளையாடியுள்ளனர்.நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பொருட்படுத்தாமல், கால அவகாசம் கோர தொடர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது தெரிகிறது.எனவே, அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை சரிசெய்யவோ அல்லது அகற்றவோ, இந்த நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்க முடியாது.மேலும், தவறாக பயன்படுத்தும் மனுதாரர்களின் இந்த நடைமுறையை ஊக்குவிக்க முடியாது. எனவே, அவர்களின் செயல்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தொகையை, அவர்கள் சி.எம்.டி.ஏ.,வுக்கு செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.