பெருங்களத்துாரில் அறிவியல் பூங்கா மண்டலக்குழு கூட்டத்தில் தகவல்
பெருங்களத்துார், தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலக்குழு கூட்டம், மண்டல தலைவர் காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.நான்காவது மண்டலத்தில், பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ள மேன்ஹோல்களில் கசிவு ஏற்பட்டு, முக்கிய சாலைகளில் கழிவு நீர் வெளியேறி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.அதனால், மேற்கு தாம்பரத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடை மேன்ஹோல்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.அதேபோல், 4 கோடி ரூபாய் செலவில், சாலை, கால்வாய், பூங்கா சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் முடிவானது.அதோடு, 2 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ள பிற பணிகளுக்கான உத்தரவு உள்ளிட்ட தீர்மானங்கள், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து, பீர்க்கன்காரணையில், 1 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டம்; சசிவரதன் நகர், வசந்தம் நகர், வெங்கடேஸ்வரா நகர், அன்னை அஞ்சுகம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பாலாறு குடிநீர் வினியோகம் செய்ய, 2.50 கோடி ரூபாய் செலவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளன.அண்ணா நுாற்றாண்டு பூங்காவில், 1.80 கோடி ரூபாய் செலவில், புதிய அறிவியல் பூங்கா அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.நான்காவது மண்டலத்தில் சாலைகளை சீரமைக்க, 26.5 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என, மண்டலக் குழு தலைவர் காமராஜ் கூறினார்.