கொருக்குப்பேட்டை ரயில்வே கூட்ஸ் ஷெட் அவலம் மழையில் நனையும் இறக்குமதி பொருள்கள்
கொருக்குப்பேட்டை, சென்னை, வியாசர்பாடியில், கொருக்குப்பேட்டை ரயில்வே கூட்ஸ் ஷெட் உள்ளது. இங்கு, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் இருந்தும், ஆந்திரா, பீஹார், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் கோதுமை, அரிசி, சோளம், சிமென்ட் உள்ளிட்ட பொருள்கள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. குமுறல்
இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு, வணிகர்கள் எடுத்து செல்கின்றனர். கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட் பராமரிப்பின்றி குப்பை, கூழமாக காட்சியளிக்கிறது. பாம்புகள், தேள்கள் உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக சுற்றி திரிகின்றன. இங்கு சரக்குகளை கையாளும் பகுதிகளில் கூரையோ அல்லது ஷெட் வசதிகளோ இல்லை. இதனால், மழை காலங்களில் கோதுமை, நெல், சோளம், சிமென்ட் உள்ளிட்ட பொருட்கள் நனைந்து, சேதமடைகின்றன. இங்கு, 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட்டில் குடிநீர், கழிவறை, மின்விளக்கு வசதி, தொழிலாளர்கள் ஓய்வறை என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாததால், பெண்கள் இரவில் கூட்ஸ் ஷெட்டில் வேலை செய்ய முடியாத நிலை உள்ளது.அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சுமை துாக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில், ரயில்வே நிர்வாகத்தினரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, குமுறுகின்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு கூட்ஸ் ஷெட் தொழிலாளர்கள் யூனியன் அமைப்பினர் கூறியதாவது:கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட், 24 மணி நேரமும் செயல்பட கூடியது. இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால், மாலை 4:00 மணிக்கு மேல் வரும் பார்சல்களை எடுக்க முடியாத நிலை உள்ளது. சிரமம்
ரயில்வே நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. இங்கு போதிய மின்விளக்கு, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், பல்வேறு குற்ற சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் தொடர்ந்து நடக்கிறது. இரவு நேரங்களில் பணி செய்யும் தொழிலாளர்கள் ஏதாவது காயம் ஏற்பட்டால், மருத்துவ வசதி கூட இல்லை.தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்ததால் பாதுகாப்பு கருதி, போலீஸ் பரிந்துரையின் பேரில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தோம். ஆனால், அவற்றையும் அகற்ற சொல்லி ரயில்வே நிர்வாகத்தினர் வற்புறுத்துகின்றனர். கூட்ஸ் ஷெட் மேற்பார்வையாளர் யாகூப் ஷெரீப் என்பவரிடம், தொடர்ந்து கடிதம் கொடுத்தும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. சுமை துாக்கும் தொழிலாளர்கள் குறைகளை கூற சென்றால், சந்திக்க மறுத்து, உதாசீனப்படுத்தி அனுப்பி விடுகிறார். சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓய்வறையில் கதவு, ஜன்னல், வாயில் உள்ளிட்டவற்றை ரயில்வே நிர்வாகத்தினர் கழற்றி விட்டனர். இதனால் தொழிலாளர்கள் மழை, வெயில் காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அவற்றை மீண்டும் பொருத்தி தர வேண்டும்.ஏற்கனவே பயன்பாடின்றி உள்ள கேன்டீனை புனரமைத்து, தொழிலாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தொழிலாளர்கள் தங்குவதற்கு போதிய ஓய்வறை இல்லாததால், மழை, வெயில் காலங்களில் அவதியடைகின்றனர். எனவே பயன்பாடின்றி பூட்டி வைத்துள்ள அறைகளை, தொழிலாளர்கள் பயன்பாட்டிற்கு புனரமைத்து தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.