மடிப்பாக்கம், சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் கிராமத்தில், சர்வே எண் 174/2ல் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி, 40 ஆண்டுகளுக்கு முன், நீர்ப்பிடிப்பு பகுதிகளுடன், 100 ஏக்கருக்கும் மேல் பிரமாண்டமாக காட்சியளித்தது.சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு முன் ஏரியின் பரப்பளவு 62 ஏக்கராக மாறியது. அதையும் ஆக்கிரமிப்பு கும்பல் 'பிளாட்' போட்டு, விற்பனை செய்ய துவங்கியது.இது குறித்து, நம் நாளிதழ் படத்துடன் விரிவான செய்தியை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அதன் பலனாக, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி ஆழப்படுத்தப்பட்டது.சில ஆண்டுகளுக்கு முன் 1.85 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நடைபாதை, அதை சுற்றி கம்பி வேலி, பக்கவாட்டில் கருங்கல் சரிவு, இருக்கை, விளக்கு, பூங்கா என பல வசதிகளும் செய்யப்பட்டன. ஏரி புதுப்பொலிவு பெற்றதால் மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், கீழ்க்கட்டளை, மூவரசம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர், தினமும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.வார விடுமுறை, பண்டிகை நாட்களில் மாலை, 4:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை ஏரிக்கரை சாலை, திருவிழா கோலம் காணும். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்துவிடுவர்.மக்கள் கூட்டத்தால், நுாற்றுக்கணக்கான உணவகங்கள், சிற்றுண்டியகங்கள், குளிர்பானக் கடைகள், தள்ளுவண்டிகள், காய்கறி கடைகள் முளைத்துள்ளன.பரபரப்பு நிறைந்த இந்த சாலையில், ஏரிக்கரை நடைபாதையை ஒட்டி ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வார விடுமுறை நாட்களில் இந்த குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.குப்பையை முறையாக அகற்றப்படாததால், நடைபாதை முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையில் உணவு தேடி, ஏராளமான மாடுகள் முற்றுகையிடுகின்றன. அவை ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு, நடைபயிற்சி மேற்கொள்வோர், குழந்தைகளை மிரளச் செய்கின்றன. நடைபாதை முழுதும் மாட்டு சாணம் கிடக்கிறது. இப்பிரச்னையை மாநகராட்சியினர் கண்டுகொள்வதே இல்லை. உயிர் பலி நிகழும் முன், மாடுகள் திரிவதை மாநகராட்சியினர் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். நடைபாதை கடைகளை முறைப்படுத்தி, குப்பை தொட்டிகளையும், குப்பையையும் அகற்றி சுகாதாரமான காற்றை சுவாசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.