காணாமல் போனதாக தேடப்பட்டவர் சைபர் குற்றவாளிகள் பிடியில் மீட்பு
சென்னை:தேனாம்பேட்டை, ரயில்வே குடியிருப்பில் வசிப்பவர் ராம் பிரசாத், 54. சென்னை மாநகராட்சியில் கோட்ட பொறியாளராக உள்ளார். இரு தினங்களாக அவர் மாயமானார். ராம் பிரசாத் காணாமல் போனதாக, தேனாம்பேட்டை போலீசில் அவரது மருமகன் ரஜினி காந்த் புகார் அளித்தார்.ராம்பிரசாத் பயன்படுத்திய மொபைல் போன் இருக்குமிடம் தெரிந்ததை அடுத்து, அவர் பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு சென்ற போலீசார், ராம் பிரசாத்தை அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகின.போலீசார் கூறியதாவது:சில தினங்களுக்கு முன் ராம் பிரசாத்தின் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு, மும்பை சி.பி.ஐ.,போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு மர்மநபர் பேசியுள்ளார். மூன்று வங்கிகளில் 38 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டதாகவும், தற்போது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ராம் பிரசாத்தை மிரட்டியுள்ளார். ஐந்து கோடி ரூபாய் கொடுத்தால் வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் கூறியுள்ளார். மர்ம நபர் கூறியபடி, பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் தனி அறை எடுத்து தங்கி, பணத்தை புரட்ட ராம் பிரசாத் முயற்சித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு போலீசார் கூறினர். ராம் பிரசாத்துக்கு மிரட்டல் விடுத்த மொபைல் போன் எண்ணை வைத்து, மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.சில மாதங்களாகவே மும்பை போலீஸ் போல பேசியும், 'இ-மெயில்' வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பியும் பலரை மிரட்டி, 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் பணம் பறிக்க முயன்று வருகின்றனர்.