திருவொற்றியூரில் புது அங்கன்வாடி மையங்கள்
எண்ணுார்:சி.பி.சி.எல்., நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதியான, 1.75 கோடி ரூபாய் செலவில், ஒன்றாவது வார்டில், சத்தியவாணி முத்து நகர், தாழங்குப்பத்தில் அங்கன்வாடி அமைய உள்ளது. இரண்டாவது வார்டில், காட்டுக்குப்பம், நேரு நகர், எல்லையம்மன் கோவில் தெரு ஆகிய ஐந்து இடங்களில், புதிய அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் வடசென்னை எம்.பி., கலாநிதி, மண்டல குழு தலைவர்தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.அதேபோல், ஐ.ஓ.சி.எல்.,நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதியான 68 லட்சம் ரூபாயில், காலடிப்பேட்டை, மார்க்கெட் லைன், அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், இரு அங்கன்வாடி மைய கட்டடப் பணிகள் முடிந்து திறந்து வைக்கப்பட்டன. புதிய கட்டடத்தில், விளையாட்டு உபகரணங்கள், குளிரூட்டி உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்று உள்ளன.இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர் சரண்யா, மண்டல உதவி கமிஷனர் சகுபர் உசேன், செயற்பொறியாளர் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.