புதிய தாழ்தள பஸ்கள் ராஜஸ்தானில் இருந்து வருகை
சென்னை:மாற்றுத்திறனாளிகள் பயணிக்க வசதியாக, புதிய பேருந்துகளில் கணிசமான அளவிற்கு, தாழ்தள வசதி கொண்ட பேருந்துகளை வாங்கும் பணிகளை, போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது.அதன்படி, சென்னையில் இயக்க 500 தாழ்தள பேருந்துகளை, அசோக் லேலண்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அசோக் லேலண்டு தொழிற்சாலையில், இந்த வகை பேருந்து தயாரித்து அனுப்பப்படுகின்றன. முதல்கட்டமாக, 58 பேருந்துகள் சென்னை வந்து, பயணியரின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளன.மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகள் பயணிக்க வசதியாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 500 பேருந்துகளில், 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் பயணியரின் சேவைக்கு துவக்கப்பட்டுள்ளன.இந்த பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி, இறங்க முடியும். இருக்கையிலும் அமர்ந்து செல்ல வசதி இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து பயணியரிடமும், நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எஞ்சியுள்ள 450 பேருந்துகளும் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், அனைத்து பேருந்துகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.