திருமங்கலம், அண்ணா நகரை அடுத்த, திருமங்கலத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பராமரிப்பில், அரசு அலுவலர்களின் வாடகை குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பில் அரசு உயர் அலுவலர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், உயர் நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் என, 606 குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இக்குடியிருப்பின் முன்பகுதியில் உள்ள நடைபாதைகளில், 20-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் மாலை மற்றும் இரவு வேளைகளில், கடைகளில் உணவு அருந்துவோர், குடியிருப்புக்கு செல்லும் நுழைவாயிலில் வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர்.இதுகுறித்து தட்டிக் கேட்போரிடம் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சமீபத்தில், ஆக்கிரமிப்பாளர்களை தட்டிக்கேட்ட அரசு ஊழியர் ஒருவரின் கார் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். இது குறித்து, திருமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கார் கண்ணாடி உடைப்பு
இது குறித்து, காரின் உரிமையாளர், லஞ்ச ஒழிப்புத்துறையின் அலுவலக அதிகாரி சரவணன் கூறுகையில், ''சாலையோர ஆக்கிரமிப்பு உணவகங்கள், மாலை வேளைகளில் வீட்டிற்கு வரும் பள்ளி மாணவர்கள் முதல் குழந்தைகள், பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. நுழைவாயிலை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் பெரும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து தட்டி கேட்டால், மது போதையில் கொலை மிரட்டல் விடுகின்றனர்.அதுமட்டுமின்றி, அக்கடைகளுக்கு வரும் ஒரு சிலர், அந்த உணவகத்திலேயே மது அருந்தி காலி மதுபாட்டில்களை குடியிருப்பில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது துாக்கி வீசுகின்றனர். இதுதொடர்பாக, வீடியோ ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.