உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 391 அம்மா உணவகங்களை சீரமைக்க உத்தரவு புத்துயிர்! ருசியான புதிய உணவுகளை வழங்க நடவடிக்கை

391 அம்மா உணவகங்களை சீரமைக்க உத்தரவு புத்துயிர்! ருசியான புதிய உணவுகளை வழங்க நடவடிக்கை

சென்னை :சென்னை மாநகராட்சியில் செயல்படும் 'அம்மா' உணவகங்களில் கட்டட விரிசல், குடிநீர் பிரச்னை, ஒரே விதமான உணவு போன்ற பிரச்னைகளால், சாப்பிட செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இந்நிலையை மாற்றி, அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 391 உணவகங்களிலும் அலங்கோலமான பழுதான சமையலறைப் பொருட்களை மாற்றி, வண்ணம் பூச்சு போன்ற சீரமைப்பு பணிகள் துவக்கப்பட உள்ளது. ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் தரமான உணவு வழங்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2013ல், 'அம்மா' உணவகங்கள் துவங்கினார்.சென்னை மாநகராட்சியில், அரசு பொது மருத்துவமனை உட்பட, வார்டுக்கு ஒன்று வீதம், 207 உணவகங்கள் திறக்கப்பட்டன. பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்ததால், 2016ம் ஆண்டு, வார்டுக்கு இரண்டு வீதம், 407 உணவகங்களாக அதிகரிக்கப்பட்டது.நீதிமன்ற வழக்கு, மெட்ரோ ரயில் பணி உள்ளிட்ட காரணங்களால் 16 உணவகங்கள் மூடப்பட்டன. தற்போது, 391 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, இட்லி ஒரு ரூபாய்; பொங்கல், சாம்பார், லெமன், கருவேப்பிலை சாதம் தலா 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் கிடைப்பதால், கூலி தொழிலாளர்களும், ஏழை மக்களும் பெரிதும் பயனடைகின்றனர்.இவற்றில் தினமும் ஐந்து லட்சம் ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் கிடைக்கிறது. ஆனால், குறைந்த விலைக்கு உணவுகளை வழங்குவதால் ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் செலவாகிறது. ஆண்டுதோறும், 120 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படுகிறது. நஷ்டத்தை ஈடுசெய்ய, எந்தவித புது திட்டமும் அறிமுகப்படுத்தவில்லை. உணவகத்தின் சுவை ஒரே விதமாக இருப்பதால், சாப்பிடும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.உணவு தயாரிப்பு பொருட்களை கையாளுவதில் முறைகேடு நடப்பதாகவும், இட்லி, சப்பாத்தி ஆகியவற்றை தெருவோர கடைகள், 'டாஸ்மாக்' மதுக்கூடங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.நஷ்டத்தை காரணம் காட்டி, அம்மா 'உணவகங்களை படிப்படியாக மூட முடிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. நஷ்டத்தை ஈடுசெய்ய, 'நமக்கு நாமே திட்டம்' வாயிலாக, தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் தொடர்ந்து நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.அதே போல, சாப்பாட்டின் வகைகளை மாற்றி, ருசியாக வழங்கினால், விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து அம்மா உணவகங்களின் கட்டடங்களை சீரமைத்து, வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களின் சமையலறையில் பிரிஜ், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பழுதடைந்த இயந்திரங்கள், சமையலறை பொருட்களை மாற்றவும், மண்டல அதிகாரிகளுக்கு, மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.வரும் காலங்களில், அம்மா உணவகம் தொடர்பாக புகார் வந்து, மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கறாராக கூறப்பட்டு உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் இல்லை. அம்மா உணவகங்கள் பல, மோசமான நிலையில் உள்ளன. குடிநீர் வருவதில்லை, கூரை சேதம், சமையல் பொருட்கள் பழுது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தன. கவுன்சிலர்கள், நிலைக்குழு கூட்டங்கள் வாயிலாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ஆரம்பத்தில் அம்மா உணவகங்களுக்கு வந்த பயனாளிகள், இப்போது வருவதில்லை என்பதும் தெரிந்தது.இதனால், அனைத்து அம்மா உணவகங்களையும் சீரமைத்து புதுப்பொலிவுடன் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பயனாளிகளின் வருகையை அதிகரிக்க, ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேரடி ஆய்வுக்கு உத்தரவு

அனைத்து அம்மா உணவகங்களிலும், வண்ணம் பூசும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான நிதியை, உரிய துறை வாயிலாக மாநகராட்சியில் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும், சுகாதாரத்துறை, பொறியியல் துறை, மின் துறை ஆய்வு செய்ய வேண்டும். கட்டட விரிசல், சேதம், மின்சாதன பொருட்கள் சேதம், கழிவுநீர் இணைப்பில் பிரச்னை தெரியவந்தால், உடனே சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Maheesh
ஜூன் 13, 2024 19:24

ரோட்டில் தள்ளு வண்டியில் இட்லி தோசை என கொடுக்கிறார்கள், மக்கள் அங்கு சென்று வாங்கி சாப்பிடலாம். எல்லா தொழில்களையும் அரசு எடுத்து மலிவாக செய்து கொடுத்தால் அந்த தொழிலை செய்து வரும் மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்க வேண்டி வரும்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ