சென்னை, சென்னையில், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர், கலெக்டர் உள்ளிட்டோர் பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வளசரவாக்கத்தைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னையில் பல இடங்களில், பாதுகாப்பாக நடைபயணம் மேற்கொள்வது சவாலாக உள்ளது. மெட்ரோ ரயிலுக்காக பல இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. வேகமாக வரும் வாகனங்களால், பாதசாரிகள் பாதுகாப்பாக செல்ல முடியவில்லை. நடைபாதைகளில் பெரும்பாலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. நடைபாதையை சிறு கடைகள், வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமிக்கின்றனர். அதனால், நடைபாதையை விட்டு, சாலையில் இறங்கி நடக்க வேண்டியுள்ளது.மெட்ரோ ரயிலுக்காக பல இடங்களில் பணிகள் நடப்பதால், பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்பட்டுள்ளன. அவற்றிலும் கூரைகள் இல்லை. பாதசாரிகள், நடைபாதைகளில் சுதந்திரமாக நடந்து செல்ல, உரிய வசதிகளை அளிக்கும்படி, சென்னை மாநகராட்சி, போக்குவரத்து போலீசார், சாலை போக்குவரத்து துறை, மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு மனு அனுப்பினேன்.என் மனுவை பரிசீலித்து, நடைபாதையில் பாதுகாப்பாக நடைபயணம் மேற்கொள்ள வசதிகள் அளிக்கவும், பேருந்து நிறுத்தங்களை அமைக்கவும், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் பி.டி.ஆஷா, செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, சென்னை கலெக்டர், மாநகராட்சி ஆணையர், போக்குவரத்து போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.