தீப்பிடித்த சொகுசு பஸ் பயணியர் அலறி ஓட்டம்
புழல், சென்னை, புழல், காவாங்கரை பகுதியில் இருந்து நாகர்கோவில் செல்வதற்காக, ஸ்ரீ எஸ்.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனத்தின் சொகுசுப் பேருந்து, 50க்கும் மேற்பட்ட பயணியருடன் செங்குன்றம் பகுதியில் இருந்து நேற்று மாலை மாதவரம் நோக்கி சென்றது. காவாங்கரை மீன் மார்க்கெட் எதிரே வந்தபோது, பேருந்திலிருந்து புகையுடன் நெருப்பும் கிளம்பியது. இதைப் பார்த்த ஓட்டுனர் மகேஷ், பேருந்தில் இருந்த பயணியரை உடனடியாக கீழே இறக்கிவிட்டார்.சில நிமிடங்களில் பேருந்து முழுதுமாக தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு செங்குன்றம் தீயணைப்பு துறையினர் செல்வதற்குள், பேருந்து முழுதுமாக எரிந்து எலும்புக்கூடானது. இச்சம்பவத்தால் புழல் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.செங்குன்றம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.