விளையாட்டு நகரத்தில் வசதிகள் மக்களும் கருத்து தெரிவிக்கலாம்
சென்னை:சென்னை செம்மஞ்சேரியில் அமையும் சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரத்திற்கு தேவையான வசதிகள் குறித்து, பொதுமக்கள் ஆன்லைன் முறையில் கருத்து தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது. சென்னை சோழிங்கநல்லுாரை அடுத்த செம்மஞ்சேரியில், விளையாட்டு நகரம் அமைக்க, 105 ஏக்கர் நிலத்தை அரசு தேர்வு செய்துள்ளது. இங்கு, சர்வதேச தரத்தில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி களம், வீரர்கள் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இங்கு தங்கி குறிப்பிட்ட காலத்துக்கு விளையாட்டு பயிற்சி பெறலாம். விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு போன்ற பணிகளுக்கு, தனியார் கலந்தாலோசகர் தேர்வு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக, இதில் இடம் பெற வேண்டிய வசதிகளை முடிவு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விளையாட்டு நகரத்தில் இருக்க வேண்டிய வசதிகள் குறித்து பொதுமக்கள், தங்கள் எதிர்பார்ப்பு மற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம் என சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது. இதற்காக சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ள, கியூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்தால், கேள்விகள் பட்டியல் தெரியவரும். அதில், பொதுமக்கள், தங்கள் பெயர், இ மெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும். பின், விளையாட்டு மற்றும் வசதிகள் தொடர்பான கேள்விகளுக்கான பதில் அளித்து, கருத்துகளை தெரிவிக்கலாம்.