திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகள், 87,418 வீடுகள் உள்ளன. இங்கு, தினம், 1.75 டன் மட்கும், மட்காத மற்றும் அபாயகரமான குப்பை சேகரமாகிறது.மாநகராட்சியே இப்பணிகளை மேற்கொண்ட போது, 1,200 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். காலை 9:00 மணிக்குள், வீடுகள்தோறும் குப்பை சேகரிப்பு பணி முடிந்து விடும்.இந்நிலையில், சில ஆண்டுகளாக, 'ராம்கி' எனும் தனியார் ஒப்பந்த நிறுவனம், இப்பணியை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, வீடுதோறும் குப்பை சேகரிப்பு பணியில், கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.காரணம், பாதிக்கும் குறைவான ஊழியர்களே தற்போது பணியமர்த்தப்பட்டு, குப்பை சேகரிப்பு, துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குப்பை வண்டி ஒன்றிற்கு, 250- வீடுகள் என்றிருந்த நிலையில், தற்போது, 500 வீடுகள் வரை குப்பை சேகரிக்க அறிவுறுத்தப்படுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, காலை 9:00 மணிக்குள்ளாக அனைத்து தெருக்களிலும், குப்பை சேகரிக்க முடியாமல், ஊழியர்கள் திணறி போய் விடுகின்றனர். சில இடங்களில், மதியம் வரை குப்பை சேகரிப்பு பணி நடக்கிறது.இதனால், வேலைக்கு செல்வோர் 9:00 மணி வரை பார்த்து, குப்பையை மூட்டையாக கட்டி, டூ - வீலரில் வைத்து குப்பைத் தொட்டியில் போட தெரு தெருவாக அலைகின்றனர்.பெரும்பாலான இடங்களில் குப்பைத் தொட்டி அகற்றப்பட்டு விட்டது. இதன் காரணமாக, மானாவாரியாக தெரு சந்திப்புகள், ரயில்வே தண்டவாளங்கள், நீர்நிலைகளில் வீசி செல்கின்றனர்.குப்பை தொட்டி இல்லாத மண்டலமாக்கும் முயற்சி வரவேற்கத்தக்கதுஎன்றாலும், அதற்கேற்றாற்போல் ஊழியர்களை நிரப்பி, பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்த நிறுவனம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.மாறாக, குப்பை தொட்டிகளை அகற்றி விட்டு, குப்பை சேகரிப்பு பணியிலும், ஊழியர்களுக்கு அதிக வேலை பளுஅளிப்பதால், வேறு வழியின்றி, வீதிகளில் வீசி செல்லப்படுகின்றன.இதன் காரணமாக, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை
தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள், பெரும்பாலும், மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றியவர்கள் தான். எனவே, அவர்களுக்கு அதிக வேலை பளு ஏற்படுவதால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. மேலும், வெயில் காலம் என்பதால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம், ஊழியர்களின் உடல்நலனில் அக்கறை கொண்டு, பணி பளுவை குறைப்பதற்கு ஏதுவாக ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
தரம் பிரியுங்கள்!
வேலைக்கு செல்லும் அவசரத்தில், சிலர் குப்பையை மூட்டையாக கட்டி, கண்ட இடத்தில் அலட்சியமாக வீசி செல்கின்றனர். மேலும், பலர் குப்பையை பிரித்து கொடுப்பதில்லை. இதன் காரணமாக, குப்பையை அங்கேயே தரம் பிரித்து வாங்கும் போது தான், தாமதமாகிறது. எனவே, குப்பையை, மட்கும், மட்காத மற்றும் அபாயகரமான குப்பை என, தரம் பிரித்து வழங்கினால், ஊழியர்களுக்கான வேலை பளுவும் குறையும்.