உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாகனத்தில் தே.மு.தி.க.,வினரை ஏற்ற மறுப்பு காஞ்சி அ.தி.மு.க., கூட்டணியில் புகைச்சல்

வாகனத்தில் தே.மு.தி.க.,வினரை ஏற்ற மறுப்பு காஞ்சி அ.தி.மு.க., கூட்டணியில் புகைச்சல்

வாலாஜாபாத், காஞ்சிபுரம் தனி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக, அ.தி.மு.க.,வினர் மற்றும் தே.மு.தி.க., நிர்வாகிகள், மாவட்டம் முழுதும் ஓட்டு சேகரிக்கின்றனர்.கூட்டணியில் இருந்தாலும், அ.தி.மு.க.,வினர் தங்களை மதிப்பதில்லை என, தே.மு.தி.க.,வினர் புலம்புகின்றனர்.இது குறித்து, தே.மு.தி.க., மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது:அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம் செய்யும் வேனில் அ.தி.மு.க., மாவட்டம் மற்றும் ஒன்றிய செயலர்கள் மட்டும் ஏற்றப்படுகின்றனர். எங்களை, வாகனத்தில் ஏற்ற அனுமதிப்பதில்லை. நுாலாடை போர்த்தி கவுரவிப்பது என, எந்த நிகழ்ச்சிகளிலும் எங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.இது குறித்து மேலிடத்தில் தெரிவித்தால் 10 நாட்கள் பொறுத்து கொள்ளுங்கள் என்கின்றனர். தவிர, ஐந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர்களுக்காக, காஞ்சிபுரத்தில் மன சங்கடமின்றி பணியாற்றுங்கள் என, எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலிடம் கூறியதாலும், அடுத்த சட்டசபை தேர்தலில் ஓட்டு வங்கியை அதிகப்படுத்தவும் முயற்சி செய்து வருகிறோம்.அதற்காக, கூட்டணி வேட்பாளர் செல்லும் இடங்களில், எங்கள் கட்சி கொடியை உயரமாக துாக்கி காட்டி வருகிறோம். அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு சேகரிக்கும்போது அடுத்த தேர்தலில் முரசுக்கு ஓட்டளிக்க வேண்டும் என கூறி வருகிறோம். அ.தி.மு.க.,வினர் எங்களை உதாசினப்படுத்தினாலும், தே.மு.தி.க., நிர்வாகிகள் அனைவரும், இரவு, பகலாக தேர்தல் பணியாற்றுவோம். எங்கள் கட்சியை வளர்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, அமைப்பு செயலரும், முன்னாள் மாவட்ட செயலருமான வாலாஜாபாத் கணேசன் சார்பில், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக, காஞ்சிபுரம் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இதில், அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரின் புகைப்படமும் இடம் பெற்ற நிலையில், தே.மு.தி.க.,வின் நிறுவனர் விஜயகாந்த், பொதுச்செயலர் பிரேமலதா ஆகியோரின் படங்கள் இல்லாததால், தே.மு.தி.க.,வினர் அதிருப்தியடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி