| ADDED : ஜூன் 02, 2024 12:18 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், சண்முகபுரம் - விம்கோ நகர் ரயில் நிலையம் செல்ல ஏதுவாக, சில மாதங்களுக்கு முன்பு, நான்காவது வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதியில், 50 லட்ச ரூபாய் செலவில், புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், வி.ஜி.எம்., புரமோட்டர்ஸ் எனும் தனியார் மனைப்பிரிவு நிறுவனம், தார்ச் சாலையை ஒட்டிய வளாகத்தில், மனைப்பிரிவுகளை அமைத்து, விற்பனை செய்து வருகிறது.மனைப்பிரிவு வளாகத்தில், கிணறு வெட்டும் பணி நடந்தது. இதற்காக பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து, வளாகம் வெளியேயுள்ள சண்முகபுரம் -- விம்கோ நகர் ரயில் நிலையம் செல்லும் தார் சாலையும் மளமளவென சரிந்து, சேதமானது. தற்போது, விபத்து ஏதும் ஏற்படாத வண்ணம், கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், 50 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தார் சாலை சேதமானது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், தனியார் மனைப்பிரிவு நிறுவனம் உடனடியாக இதை சரி செய்து தர வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளனர்.