மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் அய்யப்பாக்கம் சிறுவன் அசத்தல்
சென்னை, செப். 7---திருவள்ளூர் மாவட்ட 'ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்' போட்டியில், அய்யப்பாக்கம் சிறுவன் இரு பிரிவில், தலா ஒரு தங்கம் வென்று அசத்தினார்.திருவள்ளூர் மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், 14வது மாவட்ட அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி, போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.ஆர்., ஸ்கேட்டிங் ரிங்கில் நடந்தது.இதில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 20 'கிளப்'களில் இருந்து, 500 மாணவ - மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.போட்டியில், அயனம்பாக்கத்தில் உள்ள தீ ஸ்க்ராம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அய்யப்பாக்கத்தைச் சேர்ந்த கவுரவ் ஹசன் பங்கேற்றார்.சிறுவன், 14 வயதிற்கு உட்பட்ட 'பேன்சி இன் லைன்' பிரிவில், 200 மீ., மற்றும் 400 மீ., என இரு பிரிவிலும், தலா ஒரு தங்கம் வென்று அசத்தினார்.எஸ்.எஸ்., அகாடமி சார்பில் பங்கேற்ற கவுரவ் ஹசன், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.