கொடுங்கையூர், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், 1 கி.மீ., சுற்று வட்டார மக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர்.கொடுங்கையூர் குப்பை கிடங்கு, 350 ஏக்கர் பரப்பு கொண்டது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முதல் எட்டு மண்டலங்களில் இருந்து, தினமும் சேகரிக்கப்படும் 2,500 டன் குப்பை, இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது.இங்கு மலைபோல் தேங்கியுள்ள குப்பையால், சுற்றுப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதியடைந்து வருகின்றனர். காற்று, நீர் மாசடைந்து, சுவாச பிரச்னை உள்ளிட்ட உடல் உபாதைகளால், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், கோடை வெயிலால் கொடுங்கையூர் குப்பை கிடங்கில், நேற்று பிற்பகல் 3 மணியளவில், திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பரவி, குப்பை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இதனால், அப்பகுதியில்1 கி.மீ., துாரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் கண் எரிச்சல், மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்.தகவலறிந்து வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், மணலி, திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த, 20க்கும் மேற்பட்ட வீரர்கள், நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.