திருவொற்றியூர்:மணலி, பாடசாலை தெரு, அய்யப்பன் கோவில் அருகே, மணலி பேருந்து நிலையம் செயல்பட்டது. இங்கிருந்து, மாதவரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு, மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மணலி, பாடசாலையில், கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, இரு வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பேருந்து நிலையம், காமராஜர் சாலை - பி.எஸ்.என்.எல்., நிறுவனம் எதிரே உள்ள காலி மைதானத்திற்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டது.இதன் காரணமாக, மாநகர பேருந்து மார்க்கமாக வரும் பயணியர், மணலிக்குள் செல்வதற்கு 1 முதல் 3 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்தில், நிழற்குடை ஏதுமில்லாததால், வெயிலில் தவியாய் தவிக்கும் நிலை உள்ளது. இரவு வேளைகளில், பேருந்துகளில் வரும் பயணியர், மணலிக்குள் செல்ல ஆட்டோக்களை நாடுவதால், ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பாடசாலை தெரு - கான்கிரீட் சாலை பணிகளை விரைந்து முடித்து, மணலி பேருந்து நிலையத்தை, ஏற்கனவே இருந்த இடத்திற்கே மாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.