உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10 ஆண்டாக வேடிக்கை பார்த்த நகராட்சி களமிறங்கி சாலையை செப்பனிட்ட பெண்கள்

10 ஆண்டாக வேடிக்கை பார்த்த நகராட்சி களமிறங்கி சாலையை செப்பனிட்ட பெண்கள்

திருநின்றவூர், திருநின்றவூர் நகராட்சி, ஒன்றாவது வார்டில் இ.பி., காலனி, பெரியார் நகர் சுரங்கப்பாதை அருகே 100 மீட்டர் நீளத்தில் சிமென்ட் சாலை உள்ளது.பெரியார் நகர் சுரங்கப்பாதை சுற்றுவட்டாரத்தில் 14, 15, 16, 17, 18 மற்றும் 19 வது வார்டுகள் உள்ளன. இங்குள்ள பெரியார் நகர், முத்தமிழ் நகர், திருவேங்கடம் நகர், சுதேசி நகர், கன்னிகாபுரம், ராமதாஸ்புரம், கோமதிபுரம் உள்ளிட்ட பகுதியில் 50,000 பேர் வசிக்கின்றனர்.இப்பகுதியில் வசிப்போர், பெரியார் நகர் சுரங்கப்பாதையை பயன்படுத்தியே பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த 2008 ல் போடப்பட்ட இ.பி., காலனி சாலை, மழையால் சேதமடைந்து, 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, சாலை வளைவில், 20 மீட்டர் சாலை படுமோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன், இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்ற கர்ப்பிணி பெண் ஒருவர், பள்ளத்தில் தவறி விழுந்து வலிப்பு ஏற்பட்டது. அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த பகுதிவாசிகள் நுாறு பேர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவுடன், இ.பி., காலனி சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, சாலையில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்திய பெண்கள், ஜல்லி, எம். சாண்ட் மற்றும் சிமென்ட் கலந்து, சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, திருநின்றவூர் நகராட்சி மேலாளர் சந்துருவை, பேராட்டத்தில் இருந்த பெண்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சு நடத்திய நகராட்சி மேலாளர் சந்துரு, இரு தினங்களுக்குள் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்தார்.இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ