பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, சென்னை, பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி சர்ச்சில், இந்தாண்டு கொடியேற்ற விழா, இன்று நடக்கிறது. அடுத்த மாதம் 8ம் தேதி வரை, இத்திருவிழா நடக்க உள்ளது.இன்று மாலை 4:30 மணிக்கு கொடியேற்றமும், தொடர்ந்து தேர் ஊர்வலமும் நடக்க உள்ளது. இவ்விழாவுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து, மாநகர போக்குவரத்து காவல் துறை நேற்று அறிவித்துள்ளது.அதன் விபரம்: திரு.வி.க., பாலத்தில் இருந்து பெசன்ட் அவென்யூ சாலை வழியாக, பெசன்ட் நகர் அல்லது சாஸ்திரி நகர் செல்லும் அனைத்து வாகனங்களும், வழக்கம் போல் செல்லலாம். அதிக கூட்டம் அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மட்டுமே, அந்த வாகனங்கள் பெசன்ட் அவென்யூ, சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது.அதற்கு பதிலாக டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் எல்.பி., சாலையை நோக்கி எம்.ஜி., சாலை, பெசன்ட் நகர் முதல் பிரதான சாலை, சாஸ்திரி நகர் பணிமனை வலது புறம், 2வது அவென்யூ வழியாக செல்லலாம். இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆரில் இருந்து திருவான்மியூர் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், வழக்கம் போல் செல்லும். எல்.பி., சாலை பகுதியில் அதிக நெரிசல் ஏற்பட்டால் மட்டுமே, வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பு, ஓ.எம்.ஆர்., வழியாக கோட்டூர்புரம் அல்லது அடையாறு நோக்கி திருப்பி விடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வாகனம் நிறுத்துமிடங்கள்
ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, பெசன்ட் நகர் 1, 2, 4 மற்றும் 17வது குறுக்குத்தெருக்கள் மற்றும் கலாசேஷ்ரா அறக்கட்டளை.