உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டிறைச்சியுடன் கலக்கப்படும் பசுக்கன்று இறைச்சி உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

ஆட்டிறைச்சியுடன் கலக்கப்படும் பசுக்கன்று இறைச்சி உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

சென்னை, ''ஆட்டிறைச்சியுடன் பசுக்கன்றின் இறைச்சியை கலந்து விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் எச்சரித்துள்ளார்.வடமாநிலங்களில் இருந்து, சென்னைக்கு ரயில் வாயிலாக பாதுகாப்பற்ற முறையில் ஆட்டிறைச்சிகள் கொண்டு வருவது தொடர்ந்து வருகிறது.அவ்வாறு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்த 1,700 கிலோ மற்றும் டில்லியில் இருந்த வந்த, 1,556 கிலோ கெட்டு போன ஆட்டிறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும், கெட்டுப்போன இறைச்சி இறக்குமதி செய்யக்கூடாது; பாதுகாப்பான முறையில் இறைச்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என, வியாபாரிகளுக்கும் பல்வேறு வகையில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, திருவல்லிக்கேணி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பேசியதாவது:பொதுமக்களுக்கு தரமான இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும். மாநகராட்சி இறைச்சிக் கூடங்களில் இருந்து கடைக்கு எடுத்து செல்லும்போது, திறந்தவெளியில் கொண்டு செல்வதால், துாசி, புகை, காக்கை கொத்தி சேதப்படுத்துதல் போன்றவை நிலவுகின்றன.எனவே, இறைச்சியை முறையாக மூடி பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். சிலர், ஆட்டு இறைச்சியுடன், கன்று குட்டிகளின் கறியை சேர்க்கின்றனர். அவ்வாறு கலந்தால் கண்டுப்பிடிப்பது சிரமம். எனவே, ஆட்டிறைச்சியுடன் கன்று இறைச்சியை கலந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், வட மாநிலங்களில் இருந்து கெட்டுப்போன இறைச்சியை வாங்கி விற்கக் கூடாது. மாநகராட்சி இறைச்சி கூடங்கள் மோசமானதாக இருந்தால், பணியாளர்களுடன் இணைந்து வியாபாரிகள் சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை