தனியார் பார்க்கிங்கான வேங்கைவாசல் சாலை
சேலையூர், மதாம்பரம் - வேளச்சேரி சாலையில், சந்தோஷபுரத்தில் இருந்து பிரிந்து செல்கிறது, வேங்கைவாசல் பிரதான சாலை.இதன் வழியாக, மாடம்பாக்கம், அகரம்தென், சித்தாலப்பாக்கம், பொன்மார் பகுதிகளுக்கும், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலைக்கும் செல்லலாம்.நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.முக்கிய இச்சாலை, சமீபகாலமாக தனியார் வாகனங்களின் பார்க்கிங் பகுதியாக மாறிவிட்டது. இப்பகுதிக்கு சம்பந்தமே இல்லாத வெளியிடங்களை சேர்ந்த தனியார் நிறுவன பேருந்துகள், காலையிலேயே கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றன.இதற்கு போட்டியாக, கன்டெய்னர் சிமென்ட் லாரிகளும் நிறுத்தப்படுகின்றன. இதனால், பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வரிசையாக வாகனங்களாகவே உள்ளன. இதனால், 'பீக் அவர்' நேரத்தில், கடும் நெரிசல் ஏற்படுகிறது.மற்றொரு புறம், சாலையில் நிறுத்தப்படும் தனியார் பேருந்துகள், சிமென்ட் லாரிகளுக்கு நடுவில் இருந்து, மாடு, நாய்கள் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் விபத்தும் ஏற்படுகிறது. இதை அப்பகுதிவாசிகள் தட்டிக்கேட்டால், தனியார் பேருந்து ஓட்டுநர்கள், அவர்களை மிரட்டுகின்றனர். இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.