சென்னை, கும்மிடிப்பூண்டி - சென்னை ரயில் பாதை சென்ட்ரலை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. இந்த பாதை வழியாக மின்சார, விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும்போதெல்லாம், மின்சார ரயில்கள் ஓரம்கட்டி நிறுத்தப்படுகின்றன. இதனால், இந்த தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள், தினமும் 45 நிமிடங்கள் வரை காலதாமதமாக இயக்கப்படுகின்றன.கூடுதல் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள் இல்லாததும் முக்கிய காரணமாக இருக்கிறது. ரயில்களின் தாமதம் ஏற்படுவதை கண்டித்து, ரயில் பயணியர் பல்வேறு முறை போராட்டம் நடத்தி உள்ளனர்.இதையடுத்து, இந்த தடத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைப்பது, கிடப்பில் உள்ள ரயில் பாதை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதேபோல், விம்கோ நகர் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதோடு, 80 லட்சம் ரூபாயில் புது நடைமேடை அமைக்கும் பணிகள், இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.இதனால், இந்த தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்களால் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். மேலும், சில விரைவு ரயில்கள் நிறுத்துவது குறித்து தெற்கு ரயில்வே ஆய்வு மேற்கொள்ள உள்ளது.அருகிலேயே மெட்ரோ ரயில் நிலையமும் இருப்பதால், பயணியர் வந்து செல்ல வசதியாக இருக்கும் என பயணியர் கருதுகின்றனர்.தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் தடத்தில் ரயில்கள் தாமதம் தவிர்க்கவும், கூடுதல் ரயில்களை இயக்கவும், பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. விம்கோ நகர் ரயில் நிலையத்தில் 20 பெட்டிகள் உடைய ரயிலை நிறுத்தும் வகையில், புது நடைமேடை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.இந்த பணி முடியும்போது, வழக்கமாக செல்லும் ரயில்கள், தாமதம் இன்றி இயக்க முடியும். அதுபோல், தற்போது பெரம்பூர் ரயில் நிலையத்தில், சில விரைவு ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்குவது போல், விம்கோ நகரில் வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.