யுடியூப் பார்த்து பயிற்சி பலே ஷட்டர் திருடன் கைது
பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை மற்றும் சுற்றுப் பகுதியில், இரவு நேரத்தில், கடைகளின் ஷட்டர் பூட்டுகள் லாவகமாக உடைக்கப்பட்டு, கல்லாவில் உள்ள பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பழைய குற்றவாளியான ஆவடி, காமராஜ் நகர், நந்தவன மேட்டூரை சேர்ந்த மன்மதன், 27, என்பவர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆவலுார்பேட்டையை சேர்ந்த மன்மதன், ஆவடியில் வாடகைக்கு வீடு எடுத்து, சென்னையின் பல பகுதியில், கடை ஷட்டர் பூட்டுகளை உடைத்து திருடி வந்துள்ளார். கடை ஷட்டர் பூட்டுகளை கள்ளச்சாவி போட்டு லாவகமாக திறப்பது குறித்து, யு டியூப் பார்த்து கற்று கொண்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக விசாரணையில் மன்மதன் தெரிவித்துள்ளார். மன்மதனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.