சென்னை இருளில் மூழ்கியது ஏன்: மின் வாரியம் விளக்கம்
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், 1,830 மெகா வாட் திறனில், வட சென்னை மற்றும் வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையங்கள் உள்ளன.இங்கிருந்து கிடக்கும் மின்சாரத்தின் ஒரு பகுதி, அலமாதி துணை மின் நிலையம் வாயிலாக, மணலி துணை மின் நிலையத்திற்கு 400/ 230 கி.வோ., எடுத்து வரப்படுகிறது.அங்கிருந்து பல துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, வட சென்னை, மத்திய சென்னைக்கு வினியோகம் செய்யப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, அலமாதி துணை மின் நிலையத்தில் தீ விபத்து மற்றும் மணலி துணை மின் நிலைய வழித்தடத்தில் ஏற்பட்ட பழுதால், மணலிபுதுநகர், மணலி, எண்ணுார், திருவொற்றியூர் போன்ற பல பகுதிகளில், இரவு 10:35 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. மின் சேவை சீராகாத நிலையில், மணலி, காமராஜர் சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதேபோல், ஜோதி நகர் பகுதியிலும் 100க்கும் மேற்பட்டோர், மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாலை, 1:00 மணிக்கு பின், கலைந்து சென்றனர். அதிகாலை 5:00 மணிக்கு, மின் வினியோகம் முழுவதுமாக சீரானது.இது தொடர்பாக, மின் வாரிய செய்திக்குறிப்பு:சென்னை நகரின் முக்கிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில், மணலி துணை மின் நிலையம் உள்ளது.இந்நிலையத்திற்கு மின்சாரம் வழங்க, அலமாதி - வட சென்னை மின் நிலையம் - 2 என, இரு வழித்தட ஆதாரங்கள் உள்ளன.இவற்றில் ஏதேனும் ஒரு வழித்தடத்தில் பழுது ஏற்பட்டாலும், அடுத்துள்ள வழித்தடம் வாயிலாக, துணைமின் நிலையத்திற்கு, 100 சதவீதம் மின்சாரம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இதன் வழியாக மின்சாரம் பெற்று, 800 - 900 மெகா வாட் மின்சாரம், பல பகுதிகளுக்கான மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த, 12ம் தேதி இரவு, 9:58 மணிக்கு, மணலி துணை மின் நிலையத்தில் மின்சாரம் வழங்கும் இரு மின் வழித்தடங்களும் இயக்கத்தில் இருந்தபோதும், எதிர்பாராத விதமாக, அலமாதி துணை மின் நிலையத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.இதனால் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மேலும், இத்துணை மின் நிலையத்தில், ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனே அணைக்கப்பட்டது.இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக மயிலாப்பூர், லஸ், சாந்தோம், நுங்கம்பாக்கம், ராயபுரம், சைதாப்பேட்டை, கொளத்துார், மாதவரம், புழல், பிராட்வே, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் தடை ஏற்பட்டது.இதன் காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி, மாற்று வழியில் மின்சாரம் வினியோகம் செய்ய, அனைத்து நடவடிக்கைகளும் மின் வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட போது, அதிக மின் பளு காரணமாக, வட சென்னை - தண்டையார்பேட்டை 230 கி.வோ., வழித்தடம்; கலிவந்தப்பட்டு - தரமணி தடம்; ஸ்ரீபெரும்புதுார் - தரமணி தடத்தில் ஜம்பர் துண்டிப்பு ஏற்பட்டது.இதனால் மின்சாரம் வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டாலும்,மாற்று வழியில் மின்சாரத்தை வழங்கும் பணி, இரவு 11:00 மணிக்கு துவங்கி அதிகாலை 2:00 மணிக்குள் சென்னை மாநகர் முழுதும், 100 சதவீதம் மின்சாரம் சீரமைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் பணிகள்
இரவில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, சென்னை, புறநகரின் அனைத்து மருத்துவமனைகள், அத்தியாவசிய சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நள்ளிரவு, 2:00 மணிக்குள் சென்னை மாநகர் முழுதும், 100 சதவீதம் மின்சாரம் சீரமைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்களை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டன. - தங்கம் தென்னரசு, மின் துறை அமைச்சர்