மேலும் செய்திகள்
சுய தொழில் பயிற்சி... தேசம் உயர்த்தும் முயற்சி
25-Aug-2024
சென்னை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி., எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ராணுவ அகாடமியில் நான்கு நாள் நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது.அதில் தேர்ச்சி பெறுவோர், சென்னை பரங்கிமலையில் உள்ள ஓ.டி.ஏ., எனும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ பயிற்சி அளிக்கப்படும்.தலைமை பண்பு, தேசத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது, உடற்பயிற்சி, ஆயுதங்களை கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.அதன்படி, 11 மாதங்களாக பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா, நேற்று நடந்தது.இதில் 39 பெண் கேடட் அதிகாரிகள் உட்பட 285 கேடட் அதிகாரிகள், இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அணிவகுப்பை ஏற்றார்.பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட சாம்ரத் சிங்கிற்கு தங்கம், தனிஷ்கா தாமோதரனுக்கு வெள்ளி, தேவேஷ் சந்திரஜோஷிக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டது.நட்பு ரீதியாக மாலத்தீவு, உகாண்டா, டான்சானியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும், இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது.ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி பேசியதாவது:நாட்டிற்காக சேவை செய்ய ஆண், பெண் என்ற வேற்றுமை தேவையில்லை. பயிற்சியில் நீங்கள் கற்ற பாடமும், அனுபவங்களும், உங்கள் வாழ்நாள் முழுதும் துணை நிற்கும். சீருடையில் இருக்கும்போது, எந்த தடைகள் வந்தாலும் தைரியமாக முன்னேறுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.அணிவகுப்பு விழாவில், முப்படையை சேர்ந்த அதிகாரிகள், பயிற்சி பெற்ற அதிகாரிகளின் உறவினர்கள் என, பலர் பங்கேற்றனர்.கணவன் மறைந்தும்தொடர்ந்த லட்சியம்ராணுவ வீரரான ஜேக்தர் சிங், 2020ல் ரயில் விபத்தில் இறந்துவிட்டார். கணவன் பணியாற்றிய ராணுவத்தில் சேர வேண்டும் என, தொடர்ந்து படித்த அவரது மனைவி உஷா ராணி, தன் திருமண நாளில், ராணுவ அகாடமியில் சேரும் வாய்ப்பு கிட்டியது. இரு குழந்தைகளுக்கு தாயாக இருந்து, ராணுவ லெப்டினன்டாக மாறியுள்ளார் உஷா ராணி.
25-Aug-2024