உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூவத்தில் கட்டட கழிவுகளை அகற்ற மேலும் 10 நாள் அவகாசம்

கூவத்தில் கட்டட கழிவுகளை அகற்ற மேலும் 10 நாள் அவகாசம்

சென்னை, கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளை அகற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, அக்., 10ம் தேதி வரை நீர்வளத்துறை அவகாசம் வழங்கியுள்ளது.சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே, 21 கி.மீ.,க்கு இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்கான பணிகள், 5,855 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.இப்பணிக்காக கூவம் ஆற்றின் பல இடங்களில், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு, துாண்கள் அமைக்கும் பணிகள், மே மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை துவங்கினால், கட்டட கழிவுகளால் நீரோட்டம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கட்டட கழிவுகளை செப்., 30க்குள் அகற்ற வேண்டும் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், இதுவரை கட்டட இடிபாடுகள் அகற்றப்படவில்லை.கட்டட கழிவுகளை அகற்றி, எடுத்துச் செல்வது சிரமம். எனவே, அவற்றை அகற்றி, கரையோரத்தில் கொட்டி வைத்து, ஜனவரி மாதம் மழை ஓய்ந்த பின், பணிகளை துவக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை, இம்மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கும் என, மத்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே, கட்டட கழிவுகளை அகற்ற, அக்., 10ம் தேதி வரை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அனுமதி வழங்கியுள்ளதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.எனவே, கட்டட கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நியமித்த ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்ளாமல், தொடர்ந்து பணிகளை செய்து வருகிறது.முன்கூட்டியே பருவமழை துவங்கினால், கூவம் கரையோரங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கூவம்குமார்
அக் 03, 2024 07:20

60 வருஷமா கொட்டுனதை இன்னும் பத்தே நாளில் எடுத்துடணும்னா முடியுமா கோவாலு? பத்து பத்து நாளா சி.பி.ஐ காவல் நீட்டிப்பு மாதிரி அவகாசம் குடுக்க வேண்டியதுதான்.


சமீபத்திய செய்தி