ஒரு மாதமாக குடிநீரின்றி 100 குடும்பங்கள் தவிப்பு
சென்னை, தேனாம்பேட்டை மண்டலம் 119வது வார்டில், வி.எம்.,தெரு உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.கடந்த ஒரு மாதமாக, இப்பகுதியில் குழாய் வாயிலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல், குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் இல்லாதாதல், ஒரு மாதமாக, கடையில் கேன் குடிநீர் உபயோகப்படுத்தி வருகிறோம்.மற்ற தேவைகளுக்கு, குடங்களை எடுத்துச் சென்று, பக்கத்து பகுதிகளில் தண்ணீரை பிடித்து வருகிறோம்.துணை முதல்வர் உதயநிதி தொகுதியிலேயே, குடிநீருக்காக மக்கள், ஒவ்வொரு நாளும் அல்லல்பட்டு வருகின்றனர். போதுமான அழுத்தம் கிடைக்காததால் இப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்க முடியவில்லை என, வாரிய அதிகாரிகள் கைவிரிக்கின்றனர். குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.குடிநீர் வாரிய பொறியாளரிடம் கேட்டபோது, 'ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.