சாத்தாங்காடு வளாகத்தில் 136 மனைகள் ஏலம்
சென்னை: சென்னை, சாத்தாங்காடு இரும்பு எக்கு அங்காடி வளாகத்தில், 136 மனைகளை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில், 203 ஏக்கரில் இரும்பு எக்கு மொத்த விற்பனை அங்காடி அமைந்துள்ளது. மொத்தம், 850 மனைகள் உருவாக்கப்பட்டு, இரும்பு வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டன. ஒதுக்கீடு பெற்று அதில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளாமல் இருந்த, 80 ஒதுக்கீட்டாளர்களுக்கு, சி.எம்.டி.ஏ., கடந்த மாதம் இறுதி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, யாருக்கும் ஒதுக்காமல் உள்ள மனைகளை ஏலம் வாயிலாக விற்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்து, இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, சாத்தாங்காடு வளாகத்தில், 136 மனைகள் தயாராக உள்ளன. இந்த மனைகள் ஏலம் வாயிலாக விற்கப்படும். இதற்கு, நவ., 25க்குள் விண்ணப்பிக்கலாம் என சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.