தாம்பரம் மாநகராட்சியில் 176 மாடுகள் பிடிப்பு
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், ஒரு மாதத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த, 176 மாடுகள் பிடிக்கப்பட்டு, 1.32 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.தாம்பரத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும், அக்., 23 முதல் நவ., 24 வரை, 176 மாடுகள் பிடிக்கப்பட்டன. இவற்றில், 66 மாடுகளின் உரிமையாளர்களிடம், 1.32 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீதமுள்ள, 110 மாடுகள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரை அடுத்த கொண்டமங்கலம் ஊராட்சி கோசாலையில் அடைக்கப்பட்டுள்ளன. மாடுகளை திரும்ப பெற, அதன் உரிமையாளர்கள் நாள் ஒன்றுக்கு, 2 ,000 ரூபாய்; தீவன செலவு, 250 ரூபாய் என, 2,250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.அதேபோல், தாம்பரம் - சோமங்கலம் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையில், வரதராஜபுரம், தர்காஸ், எட்டியாபுரம் பகுதிகளில், நுாற்றுக்கணக்கான பசு மாடுகள் சுற்றித்திரிகின்றன.இவை, இரவு நேரத்தில் சாலையில் படுத்து உறங்குகின்றன. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.இரவு நேரத்தில் சாலையில் படுத்து உறங்கும் மாடுகளை பிடித்து, கோ சாலையில் அடைக்க வேண்டும் எனவும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்க வேண்டும் என்றும், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.