மக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 18 பேர் மனு
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று பொது மக்களுக்கான குறைதீர் முகாம் நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, 18 மனுக்களை போலீஸ் கமிஷனர் அருண் பெற்றார். பின், பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும், தகவல் அளிக்கும்படி கூறினார். இம்முகாமில், துணை கமிஷனர் கீதா, உடன் இருந்தார். கடந்த ஒரு மாதமாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், காவலர் குறைதீர் முகாம் நடத்தப்படவில்லை. முன்பு, வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டதை போல், திங்கட்கிழமை காவலர் குறைதீர் முகாம் நடத்தப்படும். பின், மாதத்தின் முதல் மற்றும் கடைசி செவ்வாய் கிழமை, காவலர் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. தற்போது, ஒரு மாதமாக காவலர் குறைதீர் முகாம் நடத்தப்படாதது, போலீசாரிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி, எப்போது நடத்தப்படும் என, போலீசார் எதிர்பார்த்து உள்ளனர்.