விதிமீறல் குடியிருப்பு 19 வீடுகளுக்கு சீல்
அரும்பாக்கம், அண்ணா நகர் மண்டலம், 105வது வார்டில், அரும்பாக்கம், பாஞ்சாலை அம்மன் கோவில் பிரதான சாலையில், 'கதவு எண்: 127ல்' கிரிஜாசேகர் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இதில், நான்கு 'பிளாக்'களில் மொத்தம், 60 வீடுகளில் வாடகைதாரர்கள் வசிக்கின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக, மாநகராட்சிக்கு கடந்த 2015ல் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதுசம்பந்தமாக, நீதிமன்றத்தில் தேவா என்பவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன், குடியிருப்புக்கு 'சீல்' வைக்க அறிவுறுத்தப்பட்டது. மாநகராட்சி சார்பிலும் குடியிருப்புகளை காலி செய்ய 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. இதையடுத்து, 19 வீடுகளில் வசித்து வந்த வாடகைதாரர்கள், சமீபத்தில் காலி செய்தனர்.நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று பகுதி செயற்பொறியாளர் பத்மநாபன், 105 வார்டின் உதவி பகுதி பொறியாளர் வைத்தியநாதன் ஆகியோர், முதற்கட்டமாக மேற்குறிப்பிட்ட 19 வீடுகளுக்கு 'சீல்' வைத்தனர். மீதமுள்ள 41 வீடுகளை விரைவில் காலி செய்யுமாறு அறிவுறுத்தினர்.