ஆலந்துார்: கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் பகுதியில், 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, திரிபுரா மாநில பெண் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். ஆலந்துார், கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், நேற்று அதிகாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைப்பையுடன் சுற்றிய ஒரு பெண், சிறுவன் மற்றும் இருவரிடம் மவுன்ட் மதுவிலக்கு போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவர்கள் வைத்திருந்த கைப்பைகளை சோதனை செய்தனர். அவற்றில், கஞ்சா இருந்ததால், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர்கள், திரிபுரா மாநிலத்தை சேர்த்த பேபிபேகம், 34, ஆகாஷ் உசேன், 21, ஆவடியை சேர்ந்த லோகேஷ், 20, மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இதில், திருட்டு வழக்கில் சிறையில் இருந்தபோது, நண்பர்கள் வாயிலாக அறிமுகமான பேபிபேகம் என்பவருடன் சேர்ந்து, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னை, புறநகரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 21 கிலோ கஞ்சா, 30,000 ரூபாய், மூன்று மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.