23 சவரன் நகை திருடிய பணிப்பெண்கள் கைது
அயனாவரம், அயனாவரம், மயிலப்பா தெருவைச் சேர்ந்தவர் உமா, 32; ஐ.டி., ஊழியர். இவரது இரண்டு வயது குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக, கொளத்துாரைச் சேர்ந்த சந்தியா, 37, என்பவரையும், வீட்டு வேலைக்காக அயனாவரத்தை சேர்ந்த ராதிகா, 35, என்பவரையும் பணியில் அமர்த்தியுள்ளார்.பணிப்பெண்கள் இருவரும், காலை 9:30 முதல் மாலை, 5:30 வரை வீட்டில் இருப்பர். டிச., 17ல் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்த போது, 23 சவரன் நகைகள் மாயமாகியிருந்தன.தவிர, வீட்டில் பணிபுரிந்த பெண்கள் இருவரும், வேலையில் இருந்து நின்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த உமா, நகை மாயமானது குறித்து, அயனாவரம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, சந்தியா, ராதிகாவை விசாரித்த போது, இருவரும் சிறுக, சிறுக நகைகளை திருடி, விற்று, பணத்தை பங்கிட்டு கொண்டதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து, 19 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.