விமான நிலைய மெட்ரோவுக்கு 2வது பார்க்கிங் பணி தீவிரம்
சென்னை, சென்னையில் தற்போது, இரு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம் உட்பட 41 ரயில் நிலையங்களில், வாகனங்கள் நிறுத்தும் இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 28 நிலையங்களில் கார்களை நிறுத்தும் வசதி உள்ளது.இதில், விமான நிலைய மெட்ரோவுக்கு, பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்குள்ள வாகன நிறுத்தம், காலை 10:00 மணிக்கே நிரம்பி விடுகிறது. இதனால், வாகனங்களை நிறுத்த முடியாமல், பயணியர் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில், பயணியர் சிரமத்தை போக்க, விமான நிலையத்தில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் 45 லட்சம் ரூபாய் செலவில், புதிய வாகன நிறுத்தம் இடம் அமைக்கப்பட்டு வருகிறது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:விமான நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு, புதிய வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன.அடுத்த மாதம், இந்த புதிய வாகன நிறுத்தம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இங்கு, ஒரே நேரத்தில் 54 கார்களும், 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.