3 நாள் ரயில் கண்காட்சி இன்று துவக்கம்
சென்னை, உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மூன்று நாட்கள் ரயில் கண்காட்சி, சென்னை ரயில் அருங்காட்சியகத்தில் இன்று துவங்குகிறது. சிறிய அளவிலான மாதிரி ரயில்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது: சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில், ஐ.சி.எப்., அருகில் ரயில்வே வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், சென்னை ரயில் அருங்காட்சியகம் உள்ளது. இந்தியன் ரயில்வே, தெற்கு ரயில்வே, ஐ.சி.எப்., ஆகியவற்றின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.இதற்கிடையே, உலக பாரம்பரிய தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை ஐ.சி.எப்., சார்பில், சிறிய அளவிலான மாதிரி ரயில்கள், இன்று முதல் வரும் 27ம் தேதி வரை காட்சிப்படுத்த உள்ளன. இந்த மூன்று நாட்களிலும் பார்வையாளர்களுக்காக குறிப்பாக, சிறுவர்களுக்காக பல சிறிய அளவிலான மாதிரி ரயில்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பாரம்பரிய ரயில்களை ரசிக்கலாம். இந்த கண்காட்சி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும். அனுமதி இலவசம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.