ஏசி வெடித்து சிதறி 3 பேர் காயம்
பம்மல், அனகாபுத்துாரில், பெட்ரோல் பங்கில் பொருத்திய 'ஏசி' பெட்டி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில், மூன்று பேர் காயமடைந்தனர். பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்துார் பேருந்து நிலையம் அருகே, தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. அதன் அலுவலகத்தில், புதிய ஹயர் 'ஏசி' பெட்டி பொருத்தும் பணி, நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சையத் சபீர், 22, முகிர்தீன், 24, சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சபிருல்லா, 25, ஆகிய மூன்று பேர், இப்பணியில் ஈடுபட்டனர். அறையினுள் 'ஏசி'யை பொருத்திவிட்டு, வெளியே கம்ப்ரஷர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக, கம்ப்ரஷர் இயந்திரம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், மூன்று பேரும் காயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மூன்று பேரையும் மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.